இளம்பெண் ஆடர் செய்த உணவை கொண்டுவந்த ஊழியர் அதனை சாப்பிட்டு விட்டதாக அந்த இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
லண்டனில் இல்யாஸ் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பர்கர் போன்ற உணவு பொருட்களை உபர் ஈட்ஸ் மூலம் ஆர்டர் செய்வது வழக்கம் என்பதால் உணவை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி அந்த இளம் பெண்ணிற்கு நீங்கள் ஆர்டர் செய்த உணவு பொருளானது வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலானது கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவரது செல்போன் எண்ணிற்கு உபர் டிரைவர் உங்கள் வீட்டிற்கு அருகே வந்து கொண்டிருக்கிறார் என்ற குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தான் ஆடர் செய்த உணவுப் பொருளை வாங்குவதற்கு இல்யாஸ் தயாராக இருந்த நிலையில், மீண்டும் அவரது எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அந்த உபர் ஓட்டுனர் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் நீங்கள் ஆர்டர் செய்த உணவை நான் உண்டு விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த இல்யாஸ் உபர் ஈட்ஸ் செயலிக்குள் சென்று பார்த்தபோது நீங்கள் ஆர்டர் செய்த உணவானது டெலிவரி செய்யப்பட்டது என குறிப்பிட்டிருந்தது. இது குறித்து அவர் கூறும்போது, உபர் ஈட்ஸ் மூலம் வழக்கமாக நடைபெறுவதை போன்று இல்லாமல் இந்த முறை சற்று காமெடியாக இது அமைந்ததால் அந்த ஊழியரை நான் மன்னித்து விடுகிறேன் என்றும், அந்த ஊழியர் ஒருவேளை அதிக பசியுடன் இருந்திருந்தால் இவ்வாறாக செய்திருப்பார் என்றும் கூறியுள்ளார். மேலும் நடந்த விஷயத்தை நான் வேடிக்கையாகவே பார்ப்பதால் என்னால் ஒருவர் வேலை இழப்பதை நான் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். அதோடு நான் ஆடர் செய்த உணவை உண்டு அதனை நேர்மையாக என்னிடம் அந்த ஊழியர் தெரிவித்ததால் இதனை சிறப்பான ஒன்றாகவே தான் பார்ப்பதாக இல்யாஸ் தெரிவித்திருக்கிறார்.