உலகில் மிகவும் பழமையான ஃபுட்பால் ரூல் புத்தகம் 58 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பழமையான கலைப்பொருட்கள் சேகரிப்பாளரான சோதேபிஸ் உலகின் மிகவும் பழமையான கால்பந்து விதி புத்தகம் ஒன்றை சமீபத்தில் 57,000 பவுண்டுகளுக்கு அதாவது இந்திய மதிப்பின் படி ரூ. 58 லட்சத்துக்கு ஏலம் விடுத்துள்ளார். மேலும் அந்த புத்தகம் விளையாட்டின் வளர்ச்சிக்கு எப்படி பங்களித்துள்ளது என்பதன் அடிப்படையிலும், வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் அந்தப் புத்தகத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மதகுருவான ரேவ் க்ரேவில் ஜான் செஸ்டர் என்பவரால் தொகுக்கப்பட்ட விக்டோரியன் ஸ்க்ரப்புக் ஒன்றும் ஏலத்திற்கு விடப்பட்டது. அதில் வில்லியம் பேக்கர் கையொப்பம் இட்டுள்ளார். கடந்த 1858-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி கமிட்டியின் உறுப்பினராக இருந்த வில்லியம் பேக்கர் விதிகளுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டுள்ளார். மேலும் 1859-ஆம் ஆண்டு கைகளால் எழுதி தொகுக்கப்பட்ட புத்தகம் ஷெஃபீல்ட் கால்பந்து கிளப் நடத்திய தொடர் கூட்டங்களின் அச்சிடப்பட்டது.
1857-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷெஃபீல்ட் கால்பந்து கிளப் உலகின் மிகவும் பழமையான கால்பந்தாட்ட கிளப் என்று சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பு FIFA கருத்து தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த கிளப் கால்பந்து விளையாட்டின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது. இந்த கிளப் இன்டைரக்ட் ஃப்ரீ-கிக், கார்னர் கிக் போன்ற செட்-பீசஸ்களையும் விளையாட்டில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஷெஃபீல்ட் கால்பந்து கிளப்பிடம் அந்த புத்தகத்தின் இன்னொரு அச்சு இருந்துள்ளது.
அந்த புத்தகமும் விளையாட்டின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு வகித்ததால் அதன் மதிப்பும் உயர்ந்தது. அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மீதம் இருக்கும் ஒரே ஒரு புத்தகம் தற்போது மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இதற்கிடையே கால்பந்து விளையாட்டுகள் எப்படி வளர்ச்சி அடைந்தது என்பது கிட்டத்தட்ட 160 ஆண்டுகளுக்கு முன் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் அந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் நவீன கால்பந்து விதிமுறைகள் பற்றியும் அவற்றின் பழக்கங்களின் தொடக்கம் குறித்தும் இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் என்று புத்தகம் மற்றும் கையெழுத்து பிரதி நிபுணரான சோதேபஸ் தெரிவித்துள்ளார்.