ஸ்பெயின் நாட்டில் நடந்த லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் லா லிகா போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. அதில் ஜீபுஸ்கோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி, ரியல் சோசிடாட்டை எதிர் கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக களமிறங்கிய பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட்டை எளிதில் தோற்கடித்து முன்னேறி சென்றது.
பார்சிலோனா அணியில் லயோனல் மெஸ்சி, சேர்ஜீனோ டெஸ்ட் தலா இரண்டு கோலும், அன்டோன் கிரிஸ்மேன், ஒஸ்மானி டெம்பிலி தலா ஒரு கோலும் அடித்துள்ளனர். வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிடை பின்னுக்குத்தள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி சென்றது. முன்னாள் சாம்பியனான அட்லடிகோ மாட்ரிட் 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகின்றது.
இந்தப் போட்டியின் மூலம் பார்சிலோனா கிளப் அணியின் கேப்டனாக இருக்கும் லயோனல் மெஸ்சி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த அணிக்காக அவர் விளையாடிய ஆட்டம் 768 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பார்சிலோனா அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமையை மெஸ்சி தனதாக்கியுள்ளார். இதற்கு முன்பே ஸ்பெயின் முன்னாள் வீரர் ஸாவி ஹெர்னாண்டஸ் அந்த அணிக்காக 767 ஆட்டங்களில் ஆடியதே அதிகபட்சமாக இருந்துள்ளார்.