தென்னை மரங்களை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த மைதாமாவு பசைகளை பயன்படுத்தலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் தென்னை மரங்களில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ரூகோஸ் எனப்படும் வெள்ளைஈக்களின் தாக்குதல் உள்ளதால் தென்னையில் உள்ள சாறுகளை உறிஞ்சும் அபாயம் உள்ளது. இதனையடுத்து இந்த ஈக்கள் தென்னை ஓலைகளில் கீழ் பரப்பில் காணப்படும். இதனைத்தொடர்ந்து இந்த பூச்சியினால் தென்னை மரத்தில் கரும்புள்ளிகள் உருவாகி தென்னை ஓலைமுழுவதும் கருப்பு நிறமாக மாறுவதோடு மட்டுமல்லாமல் தென்னைமரத்தில் தேங்காய் விளைச்சலையும் குறைத்துவிடும்.
இந்த பூச்சிகளை அளிக்க விளக்கு பொறிகளை பயன்படுத்தலாம் என்றும், வேப்பிலை கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல், மீன் எண்ணெய் சோப்பு கரைசல், ஆகியவை பயன்படுத்தலாம் என்றும் பரமத்திவேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார். மேலும் மைதா மாவு பசையை தயாரித்து தென்னை ஓலைகளில் நன்கு தெளித்தால் பூச்சிகளினால் ஏற்படும் கரும்புள்ளிகளை அகற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.