ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 34,000 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் கிட்டத்தட்ட 24,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ஊழியர்கள் தினமும் மக்களுக்கு வழங்கிவருகின்றனர். ஊரடங்கு காலத்தில் கொரோனாவையும் பாராது உழைப்பதால் நாளொன்றுக்கு செலவின தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் மேலும் 3ம் கட்டமாக மே 3ம் தேதியில் இருந்து மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அந்த காலகட்டத்தில் பணியாற்றி வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் மேலும் நாளொன்றுக்கு ரூ.200 வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு நபர் ஒருவர் சுமார் ரூ.3000 வரை செலவின தொகையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.