ஆண்குறி வழியாக தடுப்பூசி போட்டால் நல்லது என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலக நாடுகள் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்குறி வழியாக ஆண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உள்ளது. அமெரிக்க செய்தி நிறுவனத்தின் பெயரில் வெளியாகியிருக்கும் அதில், மருத்துவர் ஒருவர் புகைப்படமும் ஆண்குறியில் தடுப்பூசி செலுத்துவது போன்ற ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து அந்த புகைப்படத்தில், “ஆண்குறி வழியாக கொரோனா தடுப்பூசி போடும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களுக்கு அதன் வழியாக செலுத்தும்போது தடுப்பூசியானது உடல் முழுவதும் அதிகமாக பரவி சீக்கிரம் வேலை செய்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உண்மை என்று நம்பிய சிலர் சமூக வலைதளத்தில் ஏராளமாக பகிர்ந்து வருகின்றனர். சமூக வலை தளத்தில் பகிரப்படும் இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவின் உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டதில் அது போலியானது என்று தெரியவந்துள்ளது.
அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் தொடர்பான முக்கிய வார்த்தைகள் கொண்டு தேடியதில் அதிகாரபூர்வமான சில நிறுவனங்கள் அத்தகைய தகவலை வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிடும் செய்திகளை படிக்கும் வார்த்தைகளின் Font-க்கும் புகைப்படத்தில் இருக்கும் font க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இது ஒரு போலியான செய்தி என்று கூறப்படுகிறது. ஆண்குறி வழியாக தடுப்பூசி போட்டால் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி முற்றிலும் போலியானது என்று கூறப்பட்டுள்ளது.