தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்ற கருத்தையும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்கள் – இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது தெரியவந்தது. 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணமாக மத்திய அரசு சில ஆன்லைன் விளையாட்டுகளுக்கும், சீன செயளிகளுக்கும் தடைவித்தது.
நமது நாடு ஒட்டுமொத்தமாக இளம் தலைமுறையினர்களுடைய கைகளில் தான் உள்ளது. இளம் தலைமுறையினர் உளவியல், உடல், பொருளாதாரம் போன்றவற்றில் திறமை பெற்றவராக இருப்பது அவசியம். ஆனால் இது போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், ஆன்லைன் விளையாட்டுக்களால் அவர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்து விசாரணை எடுத்துள்ளது.
ஆகவே ஆன்லைன் விளையாட்டு செயலிகளை முறைப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக வீடியோக்களை வெளியிடும் youtube சேனல்களை முறைப்படுத்த வேண்டும். இது தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணன் பிரசாத் அமர்வு பஜ்ஜி போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினர் இடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களை மறந்து விட்டனர். இதுபோல இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டு களுக்கு அடிமையாவதை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு அவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாக அமையும்.
இது இளைய சமுதாயத்தின் மீதான அக்கறை மட்டுமல்ல, தேசத்தின் மீதான அக்கறை என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞசர் பிரீ பயர், பப்ஜீ போன்ற விளையாட்டுகளை இளைஞர்கள் விளையாட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தற்போது கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீதிபதிகள், இளைஞர் சமுதாயம் உலகையே மாற்றும். ஆகவே இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் விவரங்களை தாக்கல் செய்யலாம்.
இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய – மாநில அரசுகளும், வழக்கறிஞர்களும் அறிக்கையாக தாக்கல் செய்யவும், வழக்கு தொடர்பாக youtube, google நிறுவனங்களும் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறார்.