சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலேயே அதிகமாக ராயபுரம் மண்டலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. ராயபுரத்தில் இதுவரை 3,717 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஒரு அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் மொத்தம் 45 சிறுவர்கள் உள்ளனர். அதில் நேற்று 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மீதமுள்ள சிறுவர்கள் அருகில் உள்ள சமூக நலக்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்துதலில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போது மேலும் 12 குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது வரை 39 சிறுவர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் காப்பகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.