ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று பிறந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,535 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ராஜஸ்தானில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஜெய்ப்பூரில் 43 பேருக்கும், ஜோத்புரில் 6 பேருக்கும், கோட்டாவில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று 67 வயது நிரம்பிய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.