மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் தொற்று காரணமாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தடுப்பூசி செலுத்தும் முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளின் பெயர்களை சேர்க்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்க உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது எனவும் அதில் கூறியுள்ளது. சென்னையில் நடமாட முடியாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.