மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக கடந்த ஏப்., 17ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்களின்றி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்வு இன்று நடைபெற்றது. பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். திருக்கோயில் இணையதளமான http://maduraimeenakshi.org மூலம் திருக்கல்யாண நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவில் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் மணக்கோலத்தில் எழுந்தருளினர். விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கி, புண்யாஹவாசனம், பஞ்ச கவ்யம், சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் ஓத, மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. பின்னர் மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை அனைவரும் இணையதளத்தில் கண்டுகளித்தனர்.