ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு மதுரை மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து போட்டிகளை நடத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் போட்டிகளை நடத்தும் குழுக்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் டோக்கன் வழங்க முன்பதிவு ஆரம்பித்துள்ளது.
இதில் 14 டாக்டர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழு மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் முன்பதிவு செய்ய முடியாது. அதே போல 320 மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.