கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள மங்களேஸ்வரி நகரில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவை மூலம் மீன் பிடிப்பதற்கு தனியாக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் பால்சாமி கரைக்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் கடற்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் சென்ற தெர்மாகோல் படகின் அருகில் கழுத்தில் கயிறு சுற்றி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்த பால்சாமியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக கீழக்கரை மரைன் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பால்சமியின் உடலை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.