திருமணம் நடக்க சில மணி நேரம் இருந்த போது மணமகள் தனக்கு கொரோனா எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்கள் நிச்சயித்து கதிரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கு 13 சவரன் நகை மற்றும்1, 50,000 ரூபாய் பணத்தை மாப்பிள்ளை வீட்டார் கொடுத்திருந்தனர். இருவீட்டாரும் சடங்கு சம்பிரதாயங்களை செய்துவந்தனர்.
திருமணத்திற்கு சில மணி நேரம் இருந்த நிலையில் மணப்பெண் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும், எனவே திருமணத்தை நிறுத்தும் படியும் கூறியுள்ளார். அதை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற குஷ்மா தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை எனவும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயற்சித்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் இரு வீட்டார் இடையேயும் பேசி பிரச்சனையை முடித்து வைத்தனர்.