தோட்டத்தில் இருந்த டிராக்டர்களின் பாகங்களை திருடியதாக கூறி ஒரு இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் கர்னால் என்ற மாவட்டத்தை சேர்ந்த நவாப், ஆரிப், ராஜு, இக்ரம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பக்கத்து கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்த இக்பால் என்றவரை அழைத்து வந்தனர். இக்பால் நவாபின் தோட்டத்தில் கூலி வேலை செய்பவர். இதையடுத்து தோட்டத்திலிருந்து டிராக்டரின் சில பாகங்களை காணவில்லை என்றும் அதை இக்பால் தான் திருடி விற்றிருக்கிறார் எனவும் கூறி அவரை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். தான் அந்த தவறை செய்யவில்லை என்று இக்பால் கதறியும் விட வில்லை.
இதையடுத்து இக்பாலின் சகோதரர் தயாப் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தனது சகோதரனை விடுவிக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு நவாபும் அவரது நண்பர்களும் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதையடுத்து தயாப் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இக்பாலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ராஜு மற்றும் நவாப் ஆகியோரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.