Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘அதிமுககாரங்களான எங்களையே இப்டி பண்றாங்கன்னா…’ – கதறி அழுததில் மயக்கமடைந்த பெண்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் அவர்கள் அனைவரும் வசித்துவந்துள்ளனர். இச்சூழலில் தற்போது அவர்கள் வசித்துவரும் இடத்தில் மின்சார வாரிய கட்டடம் கட்டவுள்ளதாகவும் இதற்கு பிப்ரவரி 7ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்ட இருப்பதால் உடனடியாக இந்தக் இடத்தைக் காலி செய்திட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் என்றும் இல்லையென்றால் வீடுகளைக் காலி செய்துதர கால அவகாசம் வேண்டும் என்று அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த மாவட்ட நிர்வாகம் நேற்று காலை காவல் துறையினர் துணையோடு, அங்கு வசித்துவந்த இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினரைக் கட்டாயபடுத்தி வெளியேற்றினர்.

மேலும் அவர்கள் வசித்துவந்த வீடுகளை இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ளினர். மேலும் அங்கிருந்த மரங்களை இயந்திரங்களைக் கொண்டு வேரோடு பிடிங்கி எறிந்தனர். வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதைக் கண்ட மக்கள் கதறி அழுதனர்.

இதில் சில பெண்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த அவசர ஊர்தியின் உதவியை ஏற்க மறுத்த அவர்கள், காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

வீடுகளையும், தங்களின் உடமைகளையும் சேதப்படுத்தியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட மக்கள், அதிமுகவைச் சேர்ந்த தங்களுக்கு அதிமுக ஆட்சியிலேயே பாதுகாப்பு இல்லை என்றும் தங்களது வீடுகளைக் காலி செய்திட கால அவகாசம் கூட கொடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். மேலும் காவல் துறையினரைக் கொண்டு வீடுகள் இடிக்கப்பட்டதாகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு (அவர்களுக்கு) தமிழ்நாடு முதலமைச்சர் துரோகம் விளைவித்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Categories

Tech |