இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 790 டன் மும்பை வந்துள்ளது. இந்த வெங்காயம் ஆந்திரா, டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 12,000 டன் வெங்காயம் டிசம்பர் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். அரசாங்கத்தின் சார்பாக வெங்காயத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு மாநில அரசின் எம்எம்டிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்கப்படுகிறது. இதையடுத்து மாநில அரசுகளும் வெங்காய இறக்குமதிக்கு முன்னுரிமை அளித்தன. தற்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.57 முதல் ரூ.60க்கு விற்பனை ஆகிறது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு துருக்கி, எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் உள்நாட்டு உற்பத்தி முந்தைய பருவத்துடன் ஒப்பிடும்போது 2019-20 பயிர் ஆண்டில் 25 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கிடையில் வெங்காயத்தின் விலை வருகிற ஜனவரி மாதம் வரை அதிகரித்தே காணப்படும் என்றும் அதன் பின்னர் இயல்பு நிலையை எட்டும் என்றும் வல்லுனர்கள் கணித்துள்ளனர். 2015-16 ஆம் ஆண்டில் நாடு கடைசியாக 1,987 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது நினைவுக் கூரத்தக்கது.