கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் போராடி மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மன்சனக் கொரை மின் மயானம் அருகே விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த விவசாய தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள கால்வாயில் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை ஒன்று கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டது. இந்த கால்வாயில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்ததால் காட்டெருமையின் கால் மற்றும் கொம்பு பகுதி கால்வாய்க்குள் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து அந்தத் தோட்டத்திற்குள் கிரேன் செல்ல முடியாததால் தீயணைப்பு துறையினர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமையை உயிருடன் மீட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த காட்டெருமை காலில் அடிபட்டுள்ளதால் ஏற்கனவே சிகிச்சை அளித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டதாகவும், மீண்டும் குடியிருப்பு பகுதியை ஒட்டி இந்த காட்டெருமை சுற்றித் திரிவதால் அதனை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.