பாகுபலி யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. இந்த காட்டு யானை பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதால் அதனை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த பாகுபலி யானையை பிடிப்பதற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து மாரியப்பன், வெங்கடேஷ், கலீம் போன்ற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து மயக்க ஊசி செலுத்த முடிவு செய்த சமயத்தில் அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, பாகுபலி யானை நல்ல திறனுடன் இருப்பதால் வனத்துறையினர் அருகில் செல்லும் போது நுகர்வுத் தன்மை மூலம் அதனை கண்டறிந்து அங்கிருந்து தப்பித்து விடுகிறது. எனவே அதனை தீவிரமாக கண்காணித்து கும்கி யானைகளின் உதவியோடு பாகுபலி யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.