ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகின்றார். சூதாட்ட விவகாரத்திற்கு பின் சென்னை அணி 2018இல் கோப்பையை தட்டி தூக்கி கம்பேக் தந்ததற்கு வாட்சனின் பங்களிப்பும் மிக முக்கிய காரணம். அந்த ஆண்டு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த சீசனில் பேட்டிங்கில் அவர் சொதப்பினார் என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் சென்னை அணி அவரை நீக்கவில்லை. மும்பை அணிக்கு எதிரான பரபரப்பான இறுதி போட்டியில் அனைவரும் சொதப்பினாலும் அணி அவர் மீது வைத்த நம்பிக்கைக்காக தனி ஒரு ஆளாக நின்று சிறப்பாக விளையாடினார். ஆடும் போது தனது இடது காலில் ரத்தம் வந்ததைகூட அவர் பொருட்படுத்தவில்லை. சிக்ஸர் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தார்.
அணிக்கு மீண்டும் கோப்பையை பெற்று கொடுக்க வேண்டும் என போராடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 59 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அணிக்காக போராடி ஆட்டமிழந்தார். இறுதியில் சிஎஸ்கே அணி 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இருப்பினும் அவரை சென்னை ரசிகர்கள் அவரை பாராட்டி புகழ்ந்தனர். தனக்கு அடிபட்டு ரத்தம் வழிந்த போதும் கூட மைதானத்தை விட்டு வெளியேறாமல் அணிக்காக போராடிய அவரது செயலை ரசிகர்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்நிலையில், கடந்த ஐ.பி.எல் சீசனில், தான் சொதப்பிய போதும் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு தந்ததால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என ஷேன் வாட்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சி.எஸ்.கே அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பேசிய அவர், “10 போட்டிகளில் சரியாக ரன்கள் அடிக்காவிட்டாலும் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் மற்ற அணிகளில் அப்படியெல்லாம் கிடையாது. இதுதான் சிஎஸ்கேவுக்கும் மற்ற அணிகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.
என்னால் கடந்த ஐபிஎல் சீசனில் சரியாக பேட்டிங் செய்ய முடியாததால் 2 போட்டிகளுக்கு பிறகு என்னை அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்தார்கள். அதனால், நான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிறகு எனக்கு வாய்ப்பளித்ததற்காக நான் கேப்டன் தோனிக்கும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிற்கும் நன்றி தெரிவித்தேன்.
அப்போது அவர்கள் என்னிடம் உங்களது ஆட்டத்திறன் மீது எங்களுக்கு எப்போதும் சந்தேகம் வந்ததில்லை என கூறினர். அவர்களின் ஆதரவு எனக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்தது. அதனால் நான் என்றும் அவர்கள் இருவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்” என தெரிவித்தார்.