Categories
கிரிக்கெட் விளையாட்டு

புஷ்ஃபயர் கிரிக்கெட்: எனக்கு அப்பறம் லாராதான் இறங்குவார்… ரிக்கி பாண்டிங்..!

புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டிக்காக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடன் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் திரட்டுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பாக புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும், முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் வார்னே தலைமையிலான அணியும் மோதுகின்றன.

மேலும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், ஜஸ்டின் லாங்கர், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹாடின், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷேன் வாட்சன் உள்ளிட்டோரும், யுவராஜ் சிங்(இந்தியா), வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்), பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) என ஏராளமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் பாண்டிங்கின் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகவும், வார்னே அணிக்கு கார்ட்னி வால்ஷ் பயிற்சியாளராகவும் செயல்படுகின்றனர்.

Ponting, Lara

இப்போட்டியில் இரு அணிகளுக்கும் தலா 10 ஓவர்கள் வழங்கப்படும். அதில் 5 ஓவர்கள் பவர் பிளே என்றும், பந்துவீச்சாளர்கள் எத்தனை ஓவர்கள் வேண்டுமானாலும் வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இப்போட்டியில் களமிறங்கவுள்ள ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா உடன் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் வலைதள பக்கத்தில் பதிவிட்ட ரிக்கி பாண்டிங், வரும் ஞாயிறன்று நடைபெறும் போட்டியில் நான் மூன்றாவது வரிசையில் களமிறங்கினால் எனது அணியில் இருக்கும் லாரா நிச்சயம் நான்காவது வரிசையில் களமிறங்குவார் எனப் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Categories

Tech |