கர்நாடக மாநிலம் நரசிம்மராஜ தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன்வீர் சேட். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான இவர், நேற்றிரவுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரை, அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று கத்தியால் குத்தி விட்டு ஓடினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் வலியால் துடித்தார். கழுத்துப் பகுதியில் வெட்டு காயமடைந்த அவர், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தியால் வெட்டிச் சென்ற அந்த இளைஞனை அருகிலிருந்தவர் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் 28 வயதான கவுசியானகர ஃபராஹான் என்பது தெரிய வந்தது. நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.