இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் வெளிநாட்டு டி20 தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்றுவருகிறார். இந்த சூழலில் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒவ்வொரு முறையும் 15 வீரர்கள் தேர்வு செய்யப்படும்போது மற்ற 15 வீரர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதே பேச்சாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான பிசிசிஐ தேர்வாளர்களின் சிந்தனை தற்போது இருக்கும் நவீன கால கிரிக்கெட்டுக்கு தகுந்தபடியாக இல்லை. எனவே நிச்சயம் நமக்கு இவர்களைவிட சிறந்த தேர்வாளர்கள் தேவை என்று குறிப்பிட்டார். மேலும், புதிய வீரர்களை தேர்வு செய்யும்போது அவர்களை முதலில் விளையாட அனுமதிக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் புது வீரர்களை பிற வீரர்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
உதாரணமாக விஜய் சங்கரை உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்தனர். ஆனால் அதன்பின் அவர் அணியிலிருந்து காணாமல் போனார். ஒரு வீரரை இப்படித்தான் பாதியில் விடுவதா? என்று கேள்வியெழுப்பிய யுவராஜ் சிங் வீரர்களின் திறமையை நான்கு போட்டிகளை வைத்து முடிவு செய்யக்கூடாது. அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் மனஉளைச்சல் காரணமாக அணியிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லிற்கு ஓய்வு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய யுவராஜ் சிங், இந்திய வீரர்கள் இதுபோன்ற காரணத்தை கூறி எப்போதும் ஓய்வு கேட்க முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்தால் அணியில் இடம் கிடைக்காது என்ற பயத்தினாலேயே அவர்கள் தொடர்ந்து விளையாடுகின்றனர் என்றார். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி, பிசிசிஐ தலைவரான பின்பு பல மாற்றங்கள் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தோனி மீண்டும் அணியில் இடம்பிடிப்பாரா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த யுவராஜ், அதை நீங்கள் உங்களுடைய சிறந்த தேர்வாளர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.