எனக்கும் டோனிக்கும் கூட தான் சண்டை இருந்ததாக கூறினார்கள் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரேந்திர சேவாக் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக சமூகவலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் போது இந்த பிரச்சனை அதிகமானதாகவும், அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் வெளிப்படையாக தெரிந்தது என்று தகவல் வெளிவந்தது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வீரர்கள் தங்களுக்குள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். விராட் கோலி புகைப்படம் எடுக்கும்போது அதில் ரோகித் சர்மா இடம்பெற வில்லை. அதனால் இருவருக்கும் சண்டை இருப்பது உண்மைதான் என்று அனைவராலும் சொல்லப்பட்டது. ஆனால் ஆடு களத்தில் இருவரும் நன்றாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் அனைவரும் ஒன்றாக தான் சேர்ந்து அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று ஒன்றுமில்லை. எங்கயாவது வெளியே சென்றால் மொத்தமாக தான் வெளியே செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் ஏதாவது ஒரு விழாவில் அனைவரையும் ஒன்றாக பார்க்க முடியும். விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் ஒன்றாக சாப்பிட வில்லை என்பதால் அவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.
அவர்கள் இருவரும் அதுபற்றி சொல்லாத வரையில் அல்லது அதற்கான ஆதாரம் இல்லாத வரை எதையுமே சொல்ல முடியாது. இதே போன்று எனக்கும் டோனிக்கும் கூட தான் சண்டை இருந்தது என்று கூறினார்கள். ஆனால் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது. இது போன்ற தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. என்னை பொருத்தவரை கோலிக்கும் ரோஹித்தும் இடையே எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை என்று ஓபன் டாப்பாக தெரிவித்துள்ளார்.