ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் தான் தலை சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதை இந்திய வீரர் ரோஹித் சர்மா நிரூபித்திக் காட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவர் 212 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார்.
பலரும் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை வியந்துப் பாராட்டிவருகின்றனர். இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது, “ரோஹித் சர்மா சிறந்த வீரர் என அனைவரும் தற்போது ஏற்றுக்கொள்வார்கள். ஒருநாள், டி20 போட்டிகளில் ரன்களை எடுத்துவந்த அவர், தான் டெஸ்ட் போட்டிகளில் ரன்களை எடுக்கத் தவறிவிட்டோம் என அறிந்துக்கொண்டார்.
தன்னால் என்ன முடியும் என்பதை அவர் தெரிந்துக்கொண்டார். டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ஒருநாள் போட்டியைப் போலதான் விளையாடுகிறார். இமாலய சிக்சர்களை அசால்ட்டாக பறக்கவிடுகிறார். நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், தற்போது சிறப்பான ஆட்டத்தால், தன்னைத் தானே அவர் பழிவாங்கிக்கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. ஒருவேளை தொடர்ந்து விளையாடியிருந்தால் இன்றளவில் 8000 அல்லது 9000 ரன்களை குவித்திருப்பார்.
இதே ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தினால் நிச்சயம் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனைகளை முறியடிப்பார். அதுமட்டுமல்லாமல், ஒரே டெஸ்ட் தொடரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் எடுப்பார். இறுதியாக ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் எண்ட்ரி கொடுத்துள்ளதால், டெஸ்ட் போட்டிக்கான தரம் கூடவுள்ளது” என்றார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா இதுவரை, ஒரு இரட்டை சதம், இரண்டு சதம் என 529 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா ஆறு சதம், ஒரு இரட்டை சதம் என 2114 ரன்களை எடுத்துள்ளார்.