முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகரான டேவிட் பிளப்ஃபியுடன் சேர்ந்து பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஹிலாரி கிளின்டன், “ஜனநாயகக் கட்சியின் முன்னணி பெண் வேட்பாளர் ஒருவரை ரஷ்யா தன் கைக்குள் போட்டுக்கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யர்களின் விருப்பத்திற்குரியவராக அவர் விளங்குகிறார். அந்த நபரின் தேர்தல் பரப்புரைக்கு உதவும் வகையில் பல்வேறு இணையதளங்களையும், பாட் (Bot) மாதிரியான தொழில்நுட்பங்களையும் ரஷ்யா செயல்படுத்தி வருகிறது” என மறைமுகமாகக் குற்றஞ்சாட்டினார்.
இதில் துளசி கபார்ட்டின் பெயரை ஹிலாரி கிளின்டன் ஒருமுறை கூட குறிப்பிடவில்லை என்றாலும், ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னணி பெண் வேட்பாளர்களில் துளசி கபார்ட் மீது மட்டுமே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது . ஆதலால், ஹிலாரி கிளின்டன் துளசி கபார்டைத்தான் குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. ஹிலாரி கிளின்டனின் இந்த குற்றச்சாட்டு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு துளசி கபார்ட் என்ன கூறியுள்ளார்?
ஹிலாரி கிளின்டனின் குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள துளசி கபார்ட், “நன்றி ஹிலாரி கிளின்டன். யுத்த வெறியர்களின் அரசியும், ஊழலின் மொத்த உருவமுமான நீங்கள் தான் ஜனநாயகக் கட்சியை பல ஆண்டுகளாக சீரழித்து வருகிறீர்கள்.நான் என்னை வேட்பாளராக அறிவித்த நாள் முதல் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பரப்புரை நடைபெற்று வருகிறது.
இதற்குப் பின் யார் இருக்கிறார்கள் என யோசித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது புரிகிறது. இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான் என்று. எனக்கு பயந்துகொண்டு கார்பரேட் மீடியாக்களில் உள்ள செல்வாக்கான நண்பர்களின் உதவியோடு என்னை எதிர்த்து வருகிறீர்கள் இல்லையா” என சாடியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதியான துளசி கபார்ட் இந்து சமயத்தைப் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.