பாஜக மூத்தத் தலைவர் ஒருவர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, கன்னவுஜில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரின் பேச்சை தடுத்து நிறுத்தி நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பி, ஜெய் ஸ்ரீ ராம் என அந்த இளைஞர் முழங்கியுள்ளார்.
நீங்கள் பாஜகவைச் சேர்ந்தவரா என அகிலேஷ் யாதவ் பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அகிலேஷ், “இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக மூத்தத் தலைவர் ஒருவர் எனக்கு மிரட்டல் விடுத்தார். என்னை தொலைபேசி மூலம் மிரட்டிய அவர், எனக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இப்போது பாதுகாப்பு வளையத்தை தாண்ட ஒரு இளைஞர் முயற்சித்துள்ளார். அந்த இளைஞர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதுகுறித்து ஊடகத்திடம் பேசவுள்ளேன்” என்றார்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் வினோத் மிஸ்ரா கூறுகையில், “பாதுகாப்பு வளையத்தை தாண்ட முயற்சித்த இளைஞரின் பெயர் கோவிந்த சுக்லா. அவர் குக்ராபூர் கிராமத்தை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அமைதிக்கு பங்கம் விளைவித்தார் என அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.