கனடாவில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் என்ற சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் ஒருவர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தினர் மீது தனது காரை கொண்டு வேகமாக மோதியதோடு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆண் ( வயது 46 ), இரண்டு பெண்கள் ( வயது 44 மற்றும் 74 ), ஒரு சிறுமி ( வயது 15 ) என 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர்.
மேலும் அந்த விபத்தில் படுகாயமடைந்த 9 வயது சிறுவனை சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த 20 வயது இளைஞரை தீவிர தேடுதலுக்கு பின் காவல்துறையினர் ஒரு வணிக வளாகத்தில் வைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த குடும்பத்தினர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மத வெறுப்புணர்வுடன் அந்த வாலிபர் விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.