யூனியன் பிரதேசம் லடாக்கில் இருந்து வடகிழக்கு திசையில் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காரகோரம் பனி மலைத்தொடரில் அமைந்துள்ள 18 ஆயிரம் அடி உயரமுள்ள சியாச்சின் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் முகாம் அமைந்துள்ளது. அப்பகுதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு காரணமாக நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட அம்மலை பிரதேசத்தில் சுமைத் தூக்கும் பணியில் ஈடுபடும் இரண்டு சாமானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கிய எட்டு பாதுகாப்புப் படை வீரர்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், மேலும் ஏழு வீரர்கள் படுகாயம் அடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள் எனவும், இந்திய ராணுவத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையோரமான இந்த சியாச்சின் பனி மலைப் பகுதி உலகிலேயே மிக உயரமான போர் புரியும் பகுதிகளில் ஒன்றாகும். அங்கு 1984ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவம் பாதுகாப்புப் படை வீரர்களை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.