லால்குடியில் இருந்து கர்ப்பிணி மகளை காரில் கடத்திச் சென்ற பெற்றோர் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியிலுள்ள பரமசிவபுரம் 8ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஹரிஹரன்(24) என்ற மகன் இருக்கிறார்.. தனியார் நிறுவன ஊழியரான இவரும், மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த மாரிராஜன் என்பவரது மகள் கீதா சோப்ராவும் (19), காதலித்து வந்துள்ளனர்..
இந்நிலையில் இருவரும் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துவிட்டு, லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கீதா சோப்ரா தன் கணவர் வீட்டாருடன் சென்றார்.
இந்த சூழலில் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் கீதா சோப்ரா நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தபோது காரில் வந்த கும்பல், வீட்டுக்குள் நுழைந்து கீதாவை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். இந்தசம்பவம் குறித்து ஹரிஹரன் லால்குடி காவல் நிலையத்தில் ஹரிஹரன் புகாரளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில், கீதா சோப்ராவை அவரது பெற்றோர் உள்ளிட்ட கும்பல் காரில் கடத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து துவரங்குறிச்சி சோதனைச்சாவடியை அந்த கார் தாண்டி செல்ல முயன்றபோது, ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் அழகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் கீதா சோப்ராவை கடத்திச்சென்ற கும்பலை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், கீதா சோப்ராவை கடத்தி சென்றது, அவருடைய தந்தை மாரிராஜன்(வயது 57), தாய் விஜயகுமாரி(வயது 43) மற்றும் அவரது உறவினர்கள் மதுரையை சேர்ந்த கார்த்திக்(வயது 21), குமரேசன்(வயது 22), கார் டிரைவர் தினேஷ்(வயது 23) மற்றும் லால்குடியை சேர்ந்த உடையன்னசாமி(வயது 48) என்பதும், கீதா சோப்ரா காதலித்து திருமணம் செய்துகொண்டது பிடிக்காத காரணத்தால், அவரை காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
பின்னர், மாரிராஜன் உள்பட 6 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.