கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
பண்டைய காலங்களில் எகிப்து நாட்டில் முன்னோர்கள் இறந்தவுடன் அவர்களின் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்தனர். அவைகளை ‘மம்மி’ என்று கூறுகின்றனர். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட மிகவும் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாத்து வருகின்றனர். இந்த ‘மம்மி’யை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்துள்ளார்.
அவர் ஆய்வு செய்த அறிக்கையில் ‘மம்மி’ வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில பகுதிகள் சிதைந்தும், சேதம் அடைந்தும் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அதை சரி செய்ய பல்வேறு வழிமுறைகளையும் கூறியுள்ளார். மம்மி வைக்கப்பட்டுள்ள பெட்டியை சுற்றி ஈரத்தன்மை அதிகமானால் ‘மம்மி’ மீது பூஞ்சைகள் வளரவும், ஈரத்தன்மை மிகவும் குறைந்தால் ‘மம்மி’யின் பாகங்கள் கீறவும் வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் ஈரத்தன்மையை 35 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை
வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதை பற்றி இந்திய அருங்காட்சியக இயக்குனர் கூறுகையில், நிபுணர் ரானியா அகமது ஆய்வு செய்து முடித்து சென்ற பின்பு ‘மம்மி’யை இன்னும் கூடுதல் கவனத்துடன் பாதுகாத்து வருவதாகவும், மம்மி வைக்கப்பட்டுள்ள அறையின் வெப்பநிலை மற்றும் ஈரத்தன்மையை கவனத்துடன் பராமரித்து வருவதாகவும் கூறினார். ‘மம்மி’யை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பராமரித்து வருவதனால் தூசி படிந்துள்ளது. தூசியை தவிர்க்க தற்போது காற்று புகாத அறையில் வைத்திருக்கிறோம். மேலும் பெட்டியின் ஈரத்தன்மையை அளவாக வைக்க அதை கண்ணாடி பெட்டியில் வைத்து மம்மியின் நிறம் மங்காமல் இருப்பதற்கு குறைவான வெளிச்சத்தில் வைத்துள்ளதாகவும் கூறினார்.