கண்காணிப்பு ட்ரோன்களை பயன்படுத்தி எல்லையில் புலம்பெயர்ந்தோரை கண்டுபிடிப்பதற்கு பிரான்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சின் தகவல் மற்றும் சுதந்திரத்திற்கான தேசிய ஆணையம் (CNIL) புலம்பெயர்ந்தோரின் தனியுரிமையை பிரான்ஸ் அரசு ட்ரோன்களை பயன்படுத்தி மீறி இருக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் பிரான்ஸ் அரசு ட்ரோன்களை பிற நோக்கங்களுக்காகவும், கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கும் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக CNIL தெரிவித்துள்ளது. இதற்கிடையே உச்சநீதிமன்றம் பிரான்சின் தலைநகரான பாரீஸில் கடந்த மே மாதம் ட்ரோன்களை காவல்துறை கண்காணிப்பு பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. மேலும் பிரித்தானியாவிற்கு பிரான்சின் வடக்கிலிருந்து செல்ல முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரால் பிரிட்டனுக்கு நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 2020-இல் பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் மற்றும் பிரித்தானிய உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் ஆகியோர் எல்லையில் ரேடார், ட்ரோன்கள், ஆப்ட்ரானிக் தொலைநோக்கிகள் மற்றும் கேமராக்களை பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பிரான்ஸ் ட்ரோன்களை பயன்படுத்தி எல்லையில் புலம்பெயர்ந்தோரை கண்காணித்து வந்துள்ளது.