பிரிட்டன் எல்லை பாதுகாப்பு படையினரே, ரகசியமாக புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் உள்துறை அலுவலகம் புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், சட்டவிரோதமாக நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிரிட்டனின் எல்லையை காக்கக்கூடிய எல்லை பாதுகாப்பு படையினரே, பிரான்சுடன் சேர்ந்து புலம்பெயர்ந்தவர்களை, நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய வைத்தது தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது பிரெஞ்சு சோதனை கப்பலான Athos, கலாயிஸ் துறைமுகத்திலிருந்து, ஆங்கிலக் கால்வாய்க்கு புலம்பெயர்ந்த மக்களை அழைத்து வந்துள்ளது.
HMC Valiant என்ற பிரிட்டன் கடலோர காவல்படை கப்பல், பிரான்சின் கடல் பகுதிக்கு சென்று அங்கிருந்து ஒரு படகில் புலம்பெயர்ந்த மக்களை டோவ்ர் துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளது. அப்போது பிரிட்டன் அதிகாரிகளுக்கும் பிரான்சிற்கும் இடையே நடந்த உரையாடல் வெளிவந்து இந்த ரகசிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
எனவே உள்துறை அமைச்சகம் அதிர்ச்சிக்குள்ளானது. உடனடியாக பிரீத்தி படேல், நேற்று இரவே, விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இச்சம்பவம் நடைபெற்ற அன்று புலம்பெயர்ந்தோர் சுமார் 144 பேர் பிரிட்டன் வந்துள்ளார்கள். ஆனால் இதில் எத்தனை நபர்களை பிரிட்டன் கடலோர காவல்படை கப்பல் கொண்டு சென்றது என்பது தெரியவில்லை.