பிரான்ஸ் நாடானது இந்தியாவுடன் பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாடானது நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பிரான்ஸ் உடன் ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. இதனை அடுத்து நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் புதிய ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உடன் செய்து கொண்டது. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதிதாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதினால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் கோபமடைந்தார்.
அதிலும் நட்பு நாடான ஆஸ்திரேலியா தனது முதுகில் குத்தி துரோகம் இழைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் நட்பு நாடுகள் அனைத்தும் கைவிட்ட நிலையில் தற்போது பிரான்ஸின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதில் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் தங்களது கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரான்சுக்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இது குறித்து கூறியதில் ” இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பில் சீனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்அங்கு அதிக அளவு சக்தி வாய்ந்த கூட்டுறவு தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளது.