கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள இந்தியாவிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாடு முன்வந்துள்ளது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நோய்த்தொற்றுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. இந்தியாவிற்கு உதவுவதற்காக முன்வந்த பிரித்தானியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தற்போது பிரான்சும் இணைந்துள்ளது.
மேலும் பிரான்ஸ் நாட்டு அரசு இந்தியாவிற்கு கூடுதல் ஆக்சிஜன் சப்ளையை வழங்கவும் தேவைப்படும் வென்டிலேட்டர் மற்றும் பல மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவவும் தயாராக உள்ளது என்பதை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவிற்கு தேவையான உதவியை வழங்க திட்டமிட்டிருக்கிறது. அதற்கான நிதியை திரட்டி கொண்டிருக்கிறது என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2767 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே இதுவரை இந்தியாவின் மிக அதிகமான ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை ஆகும்.