தங்களை விவசாயிகள் என்று கூறி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 12 லட்சம் மோசடி செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்படி சிறு குறு விவசாயிகள் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூபாய் 6000 தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின்கீழ் விவசாயி அல்லாதவர்களும் பயன் பெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. அந்த வகையில், கடலூர் அருகே சில வாரங்களுக்கு முன்பே விவசாயி அல்லாத சிலர் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 4000 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதை அறிந்த உண்மையான விவசாயிகள், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வேளாண் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அதில், விவசாயி அல்லாதவர்களுக்கு உரிய தொகையை வழங்கி விட்டீர்கள். உண்மையான விவசாயிகளுக்கு ஏன் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதில்,
சமீபத்தில் மார்ச் முதல் தற்போது வரை 78,000 பேர் இந்த திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து உள்ளதாகவும், அதில் 38,000 பேர் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தொகையை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது வரை கண்டுபிடித்ததில் விவசாயிகள் அல்லாத 300 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலா ரூபாய் 4 ஆயிரம் வீதம் ரூ 12 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் போலி விவசாயிகள் அனைவரும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.