பார்வையற்ற ஆசிரியையின் ஏடிஎம் கார்டை வாங்கி பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் ராமலிங்கம்-சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி கண்பார்வையற்ற ஆசிரியை. இவர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் வந்தபோது ஆட்டோ டிரைவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ரகசிய எண்ணை கூறியுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் கார்டை வாங்கி கொண்டு பணம் எடுக்க சென்றபோது வேறு ஒரு வாலிபர் நான் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறி கார்டை மாற்றி கொடுத்துள்ளார்.
அதன் பிறகு சரஸ்வதி வங்கி கணக்கில் இருந்து ஏடிஎம் கார்ட் மூலம் ரூபாய் 71150 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை அறிந்த சரஸ்வதி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரித்தபோது அவர் நடந்ததை கூறியுள்ளார். பின்பு ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். தாராபுரம் பகுதியில் மேம்பாலம் அடியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு நபர் சுற்றித் திருந்ததை கண்ட காவல்துறையினர் அவரை அழைத்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் அவர் வசந்த் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வாலிபர் தான் சரஸ்வதியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பண மோசடி செய்தது என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வசந்திடமிருந்து ரூபாய் 70 ஆயிரத்தை பறிமுதல் செய்து சரஸ்வதியிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வசந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.