சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின்போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்தும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர் ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் அடையாள அட்டை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும் காதர் பாஷாவுக்கும் என்ன தொடர்பு என்றும், காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், பத்திரிகையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி கொள்வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மஞ்சள் பத்திரிகை நடத்துபவர்களும் தங்களை பத்திரிகையாளர் என கூறிக்கொள்வது வருத்தத்துக்குரியது என தெரிவித்தனர்.
பத்திரிகைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், பத்திரிகை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்போது பத்திரிக்கைகள், செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்வதாகவும், பத்திரிகை சங்கங்களை போலி நிருபர்கள் நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுபோன்ற போலி பத்திரிக்கையாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், உண்மையான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா என காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதுமட்டுமின்றி, தகவல் தொலை தொடர்புத் துறை செயலர் மற்றும் பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தை தாமாக இந்த வழக்கில் இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு தொடர்ந்த மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள எப்படி வந்தது என்பது குறித்தும், மனுதாரரின் பத்திரிகை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் எத்தனை பத்திரிகைகள் உள்ளன, அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. எத்தனை பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.