தூத்துக்குடி அருகே SSRBS என்ற தனியார் பேருந்து நிறுவனம் தனது பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவச போக்குவரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பல குடும்பங்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்படவே, தொடர்ந்து பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை உபயோகப்படுத்த தொடங்கிவிட்டனர். இருப்பினும் செலவுக்கு பணம் இல்லாததால் போக்குவரத்து செலவுக்கு என்ன செய்வது என்ற கேள்வி அவர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
1 மாத வேலை முடித்த பின் சம்பளம் வாங்கிய பின் தான் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலை இருக்கும் பட்சத்தில், போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்ற கோரிக்கைகளை ஏற்கனவே பொதுமக்கள் வலியுறுத்தி தமிழக அரசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. அதே போல் தனியார் பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்து சலுகை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் , தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருக்கக்கூடிய எஸ் எஸ் ஆர் பி எஸ் என்ற தனியார் நிறுவனம் ஒருபடி மேலாகச் சென்று புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி வரை உள்ள வழித்தடத்தில் பத்து நாட்களுக்கு தனது பயணிகளுக்கு இலவசமாக போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதன்படி போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
பேருந்தில் முறையாக மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் பேருந்தில் ஏறும் பகுதியிலும் கண்ணாடி பகுதியிலும் ஒட்டப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.