Categories
சினிமா தமிழ் சினிமா

குருவிகளைப் பாதுகாக்க ‘டகால்டி’ பார்க்கவந்த ரசிகர்களுக்கு இலவசக் கூண்டு – சந்தானம் ரசிகர்கள் அசத்தல்..!!

பறவைகளை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதற்காகவும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சிட்டுக்குருவி கூண்டுகளை இலவசமாக வழங்கியிருக்கும் நடிகர் சந்தானம் புதுச்சேரி ரசிகர் மன்றத்தினர், இதுவரை 10 ஆயிரம் கூண்டுகளை வழங்கியிருப்பதாகவும், மேலும் பறவைகளைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர்.

அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்களைப் பாதுகாக்க நடிகர் சந்தானம் புதுச்சேரி ரசிகர் மன்றத்தினர் டகால்டி திரைப்படம் காணவந்த பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு இலவசமாக வழங்கினர். அவர்களின் இந்த வித்தியாசமான முயற்சியைக் கண்டு பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.

புதுச்சேரியில் வசித்துவரும் சமூக சேவகரான அருண், சிட்டுக்குருவிகள் அழியாமல் பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறுவிதமாக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிட்டுக்குருவி கூண்டுகளைப் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். இவர் நடிகர் சந்தானம் புதுச்சேரி தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் இருந்துவருகிறார்.

இதையடுத்து சந்தானம் நடித்த டகால்டி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், புதுச்சேரியிலுள்ள ஜீவா ருக்மணி என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் அவரது பேனருக்கு பாலபிஷேகம் செய்து, மலர்தூவி ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து படம் பார்க்கவந்த பொதுமக்களுக்கு இலவசமாக சிட்டுக்குருவி கூண்டு வழங்கினர். இதனைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

இது குறித்து புதுச்சேரி சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் தலைவர் அருண் கூறியதாவது: பறவைகளை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதற்காகவும் பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும் டகால்டி படம் காணவந்த பொதுமக்களிடம் 100 ரூபாய் மதிப்புள்ள சிட்டுக்குருவி கூண்டு இலவசமாக வழங்கப்பட்டது.

இதுவரை 10 ஆயிரம் இலவச சிட்டுக்குருவி கூண்டுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் புதுச்சேரியில் வழங்கப்பட்டிருக்கின்றன. நடிகர் சந்தானம் நடித்து விரைவில் வெளிவர உள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸின்போது கொடுப்பதற்கு பல கூண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பறவைகள், சிட்டுக்குருவிகள் இனம் அழியாத வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும். ரசிகர் மன்றம் சார்பில் இது குறித்து ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Categories

Tech |