கொரோனா ஊரடங்கால் மனச்சோர்வுடன் காணப்பட்டு வீட்டில் முடங்கி உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவியப் பணி செய்து வருகிறார். இவர் சிறுவர் சிறுமியருக்கு வருடந்தோறும் இலவசமாக ஓவிய பயிற்சி அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறுவர் சிறுமியர் பள்ளிக்கு செல்ல முடியாததால் ஆர்வம் குறைவாகவும் மனச்சோர்வுடனும் இருந்துள்ளனர். இதனை தெரிந்துகொண்ட தவம் தனது வீட்டின் முன்பாக பள்ளி குழந்தைகளுக்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இலவசமாக ஓவிய பயிற்சி அளித்து வருகிறார். மேலும் கொரோனா காலத்தில் வருவாய் இழந்து நிற்கும் இந்த சமயத்தில் வீட்டில் மனச்சோர்வுடன் காணப்பட்ட பள்ளி குழந்தைகளுக்காக இலவசமாக ஓவியப் பயிற்சி எடுக்கும் இவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.