ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ஆயுதம் வாங்குவதற்காக வங்கி கணக்கை சிறுவன் கொடுத்ததால் 5.40 லட்சம் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் என்ற ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த 20 நாட்களாக “ஃப்ரீ ஃபயர்” என்ற இணையதள விளையாட்டை தனது தாயாரின் செல்போனில் பதிவிறக்கம் செய்து விளையாடிக்கொண்டு வந்துள்ளார். இந்த மாணவனின் தந்தை குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் பணம் அனுப்பி வைத்துள்ளார் . இதற்கிடையில் அந்த மாணவன் செல்போனில் தீவிரமாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இதில், கூடுதலாக ஆயுதம் வாங்க ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை செலவாகும் எனவும்,இதற்காக வங்கிக் கணக்கு விவரங்களை அப்லோட் செய்யுங்கள் எனவும் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
இதனால், தனது தாயின் வங்கிக் கணக்கின் விவரங்கள் மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்களையும் கொடுத்துள்ளார். சில மணி நேரத்தில் இருந்து ரூ.5.40 லட்சம் ரூபாய் அவரின் தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது . இது தெறியாத அவரின் தாயார் நேற்று தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்றுள்ளார். அதில் பணம் ஏதும் இல்லை என வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது பற்றி வங்கிக்கு சென்று விசாரித்த போது . கடந்த 3 நாட்களில் பணம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டுவிட்டதாக வங்கியின் மேலாளர் கூறினார். அதன்பிறகு, அவர் அமலாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தனது மகனுடன் சென்று புகார் அளித்துள்ளார். போலீஸார் சைபர் கிரைம் மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.