தேனி மாவட்டத்தில் நோயாளிகளை இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஓட்டுனரை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள சுப்பன் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவரான கார்த்திக் இந்த கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இதனையடுத்து தடுப்பூசி போட செல்பவர்களையும் இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்கிறார். குறிப்பாக அவர் ஆட்டோவில் மருத்துவத்திற்கு இலவசம் என்ற வசனத்தையும் ஒட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து கார்த்திக்கை வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனிசெட்டிபடியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அப்போது வெளியே இருந்த கார்த்திக்கின் ஆட்டோவில் எழுதியிருந்த வாசகத்தை பார்த்ததும் அவரிடம் விசாரித்துள்ளார். அவர் கொரோனாவால் பொதுமக்கள் அவதிப்படுவதை பார்த்து வேதனையடைந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக இலவசமாக ஆட்டோ ஓடுவதற்கு முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த சேவை மிகவும் மன நிறைவு அளிக்கிறது என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஆட்சியர் அவருக்கு சால்வை போர்த்தி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கிறது என கார்த்திக் தெரிவித்துள்ளார்.