ஈரோட்டில் அரசு சார்பில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச பட்டாவிற்கு அதிமுக நிர்வாகி ரூ 2000 பணம் கேட்ட ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஈரோட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு பயனாளிகளிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் 2000 பணம் கேட்டு மிரட்டும் செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே அரசருக்கு சேர்ந்த 10 ஏக்கர் நிலத்தைப் பிரித்து ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பட்டா பெறுவதற்கு 2,000 ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டும் என்று பயனாளிகளிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆடியோவில் பேசியிருப்பது வடக்கு திசை பேரூராட்சி முன்னாள் தலைவரும் அதிமுக செயலாளருமான ரவி என்று கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் ஆடி அமாவாசை விழாவில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.