ஏழ்மையால் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு பள்ளி ஆசிரியை செய்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எளம்பலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் கணித பட்டதாரி ஆசிரியரான பைரவி என்பவர், அப்பகுதியில் கொரோனா பாதிப்பால் பலரது குடும்பங்கள் ஏழ்மையில் தவித்து வருவதையும், ஏழ்மையின் காரணமாக அவர்களால் ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான மொபைல் போனை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதையும் உணர்ந்து, ஏழ்மை கல்வி கற்பதற்கு தடையாக இருக்கக்கூடாது என நினைத்து தனது சொந்த செலவில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில், 16 ஏழை மாணவர்களுக்கு 4 ஜி மொபைல் நெட்வொர்க்கை கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கி இலவசமாக அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு கணித ஆசிரியையான எனக்குத்தான் தெரியும் மாணவர்களுக்கு கணிதத்தை புரிய வைப்பதும், அவர்கள் புரிந்து கொள்வதும் எவ்வளவு கடினம் என்று. ஒரு வகுப்பை கூட மிஸ் செய்யாமல் கவனித்தால் மட்டுமே வகுப்பு புரியும். ஏழ்மையின் காரணமாக மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
எனவே தான் இந்த உதவியை நானே முன்வந்து செய்துள்ளேன். மேலும் கொரோனா காலகட்டம் முடியும்வரை அவர்களுக்கு தேவையான ரீச்சார்ஜ் வசதியையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.