Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக மண் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விவசாயிகளின் பங்களிப்புடன் 2017ம் ஆண்டு குடிமராமரிப்பு திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண் எடுக்கப்பட்டு விவசாயிகள், மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சுமார் 6,69,9000 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாய பயணிகளுக்கு ஏற்கனவே விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோடை கால பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை தங்கள் ஊரில் இருந்தோ அல்லது அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்தோ இலவசமாக பெற்று கொள்ளாலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |