நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து வருவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று இலவசங்களை வாரி வழங்குவார்கள். இதனால் மக்கள் இலவசங்களுக்காக ஓட்டுப் போடுகிறார்கள்; இலவசங்களை வாரி வழங்கி, ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் மக்களை கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இலவசங்களை ஒழிக்க வேண்டும்; இலவசங்கள் கொடுக்கக் கூடாது என்ற கருத்துக்கள் எல்லாம் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் தான் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றங்களில் தொடரப்பட்டன. அப்படி ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா, இலவசங்களும், சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை என தனது கருத்தை தெரிவித்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச டிவி உள்ளிட்ட திட்டங்களை சுட்டிக்காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.