‘சுதந்திரம் என்று அறிவித்தால் போரை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று, தைவானை சீனா நேரடியாகவே மிரட்டியுள்ளது.
சீனாவில் 1940களில் நடந்த உள்நாட்டுப் போரில் தோற்ற தேசியவாத கோமின்டாங் கட்சியினர், தைவான் தீவில் அரசமைத்தனர். போரில் வென்ற கம்யூனிஸ்ட்கள், சீனாவில் ஆட்சியை பிடித்தனர். அப்போது முதல், தைவான் தனி நாடு போலவே செயல்பட்டு வருகிறது. எனினும், ‘தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி’ என்று சீனா கூறி வருகிறது. தைவான் ஆட்சியாளர்கள் அதை ஏற்பதில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், தைவானுக்கு ஆயுத உதவி வழங்குகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவ்வப்போது தைவான் கடல் பகுதியில், போர் விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பி மிரட்டிப் பார்க்கிறது. இந்நிலையில், தைவான் தன்னை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தால், நிச்சயம் போரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.