கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவரை கொலை செய்து விட்டு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி பிரபா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவனுக்கு உடம்பு சரி இல்லை எனக் கூறி மருத்துவமனையில் பிரபா அனுமதித்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சீனிவாசனின் உடலை பார்க்க வந்த அவரது சகோதரர் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்தார்.
புகாரின் பெயரில் இறந்தவரின் மனைவியை விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். தினமும் தனது கணவன் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்துவதாகவும், அவர் கொடுமை தாங்க முடியாமல் தான் குமாரபாளையத்தில் சலூன் கடை நடத்தி வருபவரையும், பரோட்டா மாஸ்டரான சரவணகுமார் என்பவரையும் உதவிக்கு அழைத்து அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் அவர் உறங்கிய உடன் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சலூன் கடை உரிமையாளர் மற்றும் பரோட்டா மாஸ்டர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.