குற்ற செயல்களில் ஈடுபடாமல் இரு என்று கூறியதற்காக வாலிபரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ரவுடி மணிகண்டன் என்பவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் சிறை சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் எட்வின் ஆதம்பாக்கத்தில் வசிக்கும் தனது நண்பர்களான அஜித்குமார், தினேஷ், ரவி போன்றோருடன் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளார். அப்போது குற்றங்களை செய்து சிறைக்கு செல்வதற்கு பதில் திருந்தி நல்ல முறையில் வாழ வேண்டும் என எட்வினுக்கு அஜித்குமார் அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த எட்வின் நண்பர் அஜீத் குமாருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் உடன் இருந்த தினேஷ் மற்றும் ரவி ஆகிய இருவரும் நண்பர்களை சமாதானம் செய்துள்ளனர். இதனை அடுத்து அஜீத் குமாரை தன்னுடனே தங்குமாறு எட்வின் கூறியதால் அவர் மட்டும் அங்கேயே இருந்துள்ளார். இதனை தொடர்ந்து மறுநாள் காலையில் ரவியின் வீட்டிற்கு சென்ற எட்வின் அஜீத் குமாரை கொலை செய்து விட்டதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ரவி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அஜித்குமாரின் தலையில் பூந்தொட்டியை போட்டு கொலை செய்து விட்டு எட்வின் தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. அதன்பின் அஜித்குமாரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்தை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய எட்வினை வலை வீசி தேடி வருகின்றனர்.